நம்பெருமாள் மதியம் 12 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து, சிம்ஹ கதியில், புறப்பட்டு, சேனை முதலியாருக்கு மரியாதைகள் ஆகி, நாழிகேட்டான் வாசலின் வழியே, வெளியே வந்து, "துரைப் பிரதக்ஷினத்தில்" நேற்றைய வைகுண்ட ஏகாதசியினைப் போலவே, அனைத்து உபசாரங்களும் கண்டருளி, பரமபத வாசல் திறந்து, அடியார்களுக்கு சேவை சாதித்து,மணல்வெளி நோக்கி எழுந்தருளினார்.
நம்பெருமாள் அலங்காரம்:
நம்பெருமாள் சவுரி கொண்டை, ரத்தின காது காப்பு, வைர அபயஹஸ்தம், திருஆபரணங்கள் அணிந்து ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.
ஆழ்வார்/ஆசார்யர்கள் மரியாதை:
நம்மாழ்வார், உடையவர், திருமங்கையாழ்வார் ஆகியோர் நடைகொட்டகையில் (உள்மணல்வெளி) எழுந்தருளியிருப்பார்கள். அத்யாபகர்கள், பட்டர் திருவம்சத்தினர் முதலானோர் அவர்களுக்கு முன்பு இருந்து ஸ்ரீ பராசர பட்டர் அருளிய,"ஸ்ரீ ரங்கராஜஸ்தவம்" பாராயணத்தோடு, நம்பெருமாளை எதிர்நோக்கி, காத்துக் கொண்டு இருப்பார்கள்.
நம்பெருமாள் நடைக் கொட்டகையில் இருக்கும், மண்டபத்திலேறி, தமக்காகக் காத்திருக்கும், ஆழ்வார்களையும், உடையவரையும், நிமிர்ந்து பார்த்து, பெரு மகிழ்ச்சியோடு, அவர்களிடம், ஒய்யார நடையில்போய், ஆழ்வார்களோடு தானும் சிறிது நேரம் கலந்து இருப்பார்.
'ஸ்ரீ ரங்கராஜஸ்தவம்'கடைசி ஸ்லோகம் சாற்றுமறை ஆனதும்,நம்பெருமாள் கொட்டகையில் பக்தி உலாத்தல்கண்டு, கிழக்குப் பகுதியில் வடக்கு மண்டபத்தில் எழுந்தருளியிருப்பார்.
பராங்குச,பரகால, எதிராஜரைத் தவிர மற்ற ஆழ்வார்/ஆசார்யர்கள் கொட்டகையின் வடக்கு/தெற்கு மண்டபத்துக்கு இடையில் ஏற்கனவே எழுந்தருளியிருப்பார்கள். பின்னர் பராங்குச,பரகால, எதிராஜரும் வந்து தெற்கு மண்டபத்தில் எழுந்தருள்வார்கள்.
"ஸ்ரீ ரங்கராஜஸ்தவம்" ஸ்லோகங்களும் அவற்றின் பெருமையும்:
பட்டர் காலத்தில் சோழநாட்டை ஆண்ட வீரசுந்தரபிரம்மராயன் என்னும் மன்னனுக்கும், பட்டருக்கும் ஸ்ரீரங்கம் ஆறாம்பிரகாரச் சுற்று மதில் கட்டுவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தொடர்ந்து மன்னன் பட்டருக்குப் பல தொல்லைகளைக் கொடுத்து வந்தான். இதனால் பட்டர் அங்கிருக்க பிடிக்காமல் திருக்கோஷ்டியூர் சென்று சில காலம் இருந்தார். மன்னன் இறந்தபின் ஸ்ரீரங்கம் திரும்பினார் பட்டர். தம்முடைய மானசீகப் பெற்றோர்களான பெரியபெருமாள்/பெரியபிராட்டியாரிடமிருந்து பிரிந்த ஆற்றாமையால், தவித்துக் கொண்டிருந்த பட்டர் கன்றுக்குட்டி,
தாயைக் காண ஓடோடிச் செல்வதைப் போல மிகுந்த ஆர்த்தியுடன் ஸ்ரீரங்கம் விரைந்தார். ஸ்ரீரங்கத்தின் காவிரி ஆறு, தெருக்கள், மதில்கள், மண்டபங்களில் ஆரம்பித்து பெரியபிராட்டி/பெரிய பெருமாள் வரை, உகந்து பாடிய ஸ்லோகங்களே ஸ்ரீரங்கராஜஸ்தவம்.
இந்த ஸ்தவம் பூர்வசதகம் என்றும், உத்தரசதகம் என்றும், இரண்டு பகுதிகளைக் கொண்டது. பூர்வ சதகம் 127 ஸ்லோகங்களைக் கொண்டது. உத்தர சதகம் 105 ஸ்லோகங்களைக் கொண்டது.
பூர்வ சதகத்தாலே, த்வய மந்திரத்தின், (ரஹஸ்ய த்ரயத்தில் இரண்டாவது மந்திரம். சாக்ஷாத் ஸ்ரீமந்நாராயணனே, மஹாலக்ஷ்மித் தாயாருக்கு உபதேசித்தது). பூர்வ(முதல்) வாக்கிய அர்த்தங்களையும், உத்தர சதகத்தாலே, த்வய மந்திரத்தின் உத்தர வாக்கிய (இரண்டாம்-இறுதி) அர்த்தங்களையும், விவரிப்பதாக அமைந்துள்ளது.
இவற்றுள் பூர்வ சதகத்தில், ஆச்சார்ய பரம்பராஸ்துதி, முன்னாக உரைத்து, மங்களாசாஸனம் செய்து, அவையடக்கம் கூறி, திருக்காவிரியாற்றில், நீராடியது பற்றிப் பேசி, அங்குள்ள சோலைகளின் வனப்பை வர்ணித்து ,திருவரங்க மாநகரின் சிறப்பைப் பாடி, நகர பரிபாலகர்களை வணங்கி, அவர்களிடத்து அனுமதி பெற்று, நகரத்தின் உள்ளே புகுந்து, அங்குள்ள ஸகல ஸராசரங்களையும், நித்யமுக்தர்களின் திருவுருவமாகப் பாவித்து, வணங்கி, கோபுரங்கள் மற்றும் திருமதில்களோடு கூடிய, பெரியகோயிலை வர்ணித்து, திருமங்கையாழ்வாரால், கட்டப்பட்ட மதில்களையும், மண்டபங்களையும் வணங்கி, சந்நிதியின் வாயில் காப்போர் களான, ஜய மற்றும் விஜயர்களை (த்வார பாலகர்களை) சேவித்து, நூற்றுக்கால் மண்டபத்தை மங்களாசாசனம் செய்து, சந்திர புஷ்கரிணியின் பெருமைகளைக்கூறி, ஆழ்வார்கள் அனைவரையும் மனதில் நினைத்து, அரங்கனின் தங்க கோபுரமான, ப்ரணவாகார விமானத்தை கைகூப்பித் தொழுது, சேனை முதலியாரையும், பெரிய திருவடி என்று அழைக்கப் படுகின்ற, கருடனையும் பரிவாரங்க ளுடன் வணங்கி, பஞ்சாயுதாழ்வார்கள் (சங்கம், சக்கரம், கதை, வில், கட்கம்) திருவடி, விபீஷணாழ்வார் என்னும் இவர்களையும் வணங்கி, வாழ்த்தி, திருப்பிரம்பையும், திருமணத்தூனையும் வழிபட்டு, அரங்கன் பள்ளிகொண்டு இருக்கும் மூலஸ்தானமான, கர்பக்ரஹத்தை அனுபவித்து, அரங்கனின் திருவடிவருடும், பிராட்டிமார்களையும் (ஸ்ரீ தேவி மற்றும் பூ தேவித் தாயார்கள்) சாமரம் வீசும் மங்கைமார்களையும் துதித்து, ஆக இவ்வளவு அனுபவங்களையும், 62 ஸ்லோகங்களாலே, வரிசைக்கிரமமாக வகுத்துரைக்கிறார்.
இந்த முறையாலே த்வய மந்திரத்தின் பொருளில் அந்தர்யாமியாக உள்ள, "நாராயணபதத்தின்", நாராயணா என்னும் வார்த்தையில் உள்ள (அவயவமான) "நார" என்ற இரண்டு எழுத்துக்களின் பொருளை, விரித்துரைத்து அனுபவித்து, இப்படிப்பட்ட "நாரங்களுக்கு" அயனமாய் உள்ள, ஸ்ரீமந் நாராயணனுடைய திருவடிகளை,சரணம் புகுகின்றேன் என்ற மனோபாவத்துடன், மேலுள்ள பதங்களை விவரிக்கும் விதத்தில், 63 வது ஸ்லோகம் தொடங்கி அழகியமணவாளனை அனுபவிப்ப
வராய்,பூர்வ சதகத்தைத் தலைக்கட்டி, பூர்வ வியாக்யார்த்த விவரணமும்,(விரிவுரைகளும்) செய்தருளினார்.
அதே போல உத்தர சதகத்தில், வேதாந்தவிழுப்பொருள் ,பெரியபெருமாளான,ஸ்ரீரங்க நாதனே என்று அறுதியிட்டுக் கூறுகிறார் பட்டர்.
அரையர் சேவை:
இன்று மதியம் கொட்டகையில் அரையர்கள் திருவாய்மொழி 2-1-1 ,முதல் பாசுரமான,"வாயும் திரையுகளும் கானல் மடநாராய்" என்ற பாசுரத்தை விண்ணப்பம் செய்து, "மலைப்பு" என்னும் அபிநயித்தை அரங்கன் முன்பு செய்திடுவர்.
பின்னர் அரையர்கள் கொண்டாட்டம் சேவிக்க, படியேற்ற (ஆயிரங்கால் மண்டபத்தின் மேற்குப் புறம்) சேவையாகி, நம்பெருமாள் "திருமாமணி மண்டபத்தில்" எழுந்தருளியிருப்பார்.
பிற்பகலில் பொதுஜன சேவையாகும். (மாலை 3 மணி முதல்,7மணி வரை)
இன்று இரவு, (5மணி முதல் 7 வரை) திருவாய்மொழி 2ம் பத்து,112 பாசுரங்கள் சேவிக்கப்படும்.
"கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்"(2-10-1) பாசுரத்துக்கு அபிநயம், வியாக்யானம் ஆகும்.
இதன் பிறகு நம்பெருமாளுக்கு வெள்ளிச்சம்பா நிவேதனம் ஆகி, மூலஸ்தானத்துக்கு புறப்பாடு கண்டருள்வார். அப்போது மல்லாரி, வீணை ஏகாந்தம் கேட்டருள்வார். (நேற்றைய பதிவில் விவரித்திருந்த, இராப்பத்து முதல்நாள் புறப்பாடு போலவே)
Comments