top of page

நமக்குள் இருக்கும் அந்தர்யாமி பற்றி அறிவோமா?

இயற்கையில் படைப்பு என்பது தானாகவே தோன்றிட முடியாது. எம்பெருமானால் மட்டுமே அவற்றைத் தோற்றுவிக்க முடியும். அத்தகைய எல்லாம் வல்ல எம்பெருமான் நமக்குள்ளும் இருப்பாரா என்று பலருக்கும் தோன்றலாம்.




பஞ்ச பூதங்களிலும் ஊற்றாய் அமைந்த பெருமாள், அதே பஞ்ச பூதங்களால் உருவான அனைத்து படைப்புகளிலும் எழுந்தருளியிருப்பார் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. உலகத்தில் சாதாரண ஆசாபாசங்களுடன் இருக்கும் இந்த இயல்பான லெளதிக வாழ்க்கையில், வெளி உலகத்தை மட்டுமே பார்த்து வருகிறோம். நம்முள்ளே எழுந்தருளி வீற்றிருக்கும் பெருமாளை நாம் உணர்வதே இல்லை. ஆனால், உள்ளேயிருக்கும் பெருமாளோ நம்மை மட்டுமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார். இயற்கையில் எந்த ஒன்றை உணர வேண்டுமானாலும், அவற்றை ஐம்புலன்களால் நம்மால் உணர முடிகிறது. அதே நேரத்தில், சிலவற்றை உணர முடியவில்லை என்பதற்காக, அவை இல்லை என்று ஆகிவிடாது. உதாரணத்திற்கு, இரவில் வானில் இருக்கின்ற நட்சத்திரங்கள் பகலிலும் இருக்கும். ஆனால், சூரிய வெளிச்சத்தின் மிகுதியால் அந்த நட்சத்திரங்கள் தெரிவதில்லை. அப்படி கண்களுக்கு புலப்படவில்லை என்பதற்காக நட்சத்திரங்கள் அந்த இடத்தில் இல்லை என்றாகிவிடாது. நம்மிடம் அதை உணருவதற்கான உணர்ச்சி குறைவாக உள்ளது என்பது தான் பொருள். இதே போல், குளிர்ந்த நீரினுள்ளும் வெப்பம் உள்ளது. ஆனால், நம் தேகத்தால் அந்த வெப்பத்தை உணரும் அளவிற்கு உணர்ச்சி இல்லை. எனவே, எது ஒன்றை உணர வேண்டுமானாலும், அந்த உணர்வு நிலைக்கு மனம் செல்ல வேண்டும். ஒரு இடத்தில் வேலை பார்க்கிறோம் என்றால், நமக்கு சம்பளம் வழங்கும் முதலாளிக்காக வேலை பார்க்கிறோம். ஆனால், நம்மைப் படைத்து, நமக்குத் தேவையானதை வழங்கி, நம்முள்ளே இருக்கும் பகவானிற்கு நாம் எதையாவது செய்கிறோமா? அவர் சொல்ல வருவதை கேட்கிறோமா? ஆழ்வார்களையும், ஆச்சாரியர்களையும் அனுப்பி வைத்து, அவர்கள் நமக்கு உபதேசம் செய்யும் போது, நாம் அவற்றைக் கேட்காமல் வேறு இடத்தில் பார்வை வைத்துக் கொண்டிருக்கிறோமே? நம்முள் வீற்றிருக்கும் பெருமாளை நாம் உணர வேண்டும், அவருக்குப் பணி செய்தாலே நமக்கு அனைத்தும் கிடைத்து விடும். சாஸ்திரங்களின்படி, எல்லாம் வல்ல எம்பெருமான், நாம் வாழும் போது இயல்பு வாழ்க்கையில், நமக்குத் தேவையானவற்றையும், வாழ்க்கைக்குப் பிறகு பரமபதத்தையும் வழங்குகிறாரே. அப்படி இருக்கையில், அவருக்கு பணி செய்து, அவரை திருப்தி செய்வது தானே, நம் பிறவியின் நோக்கமாக இருக்க வேண்டும்.

198 views0 comments

Comentarii


bottom of page