கூரத்தாழ்வானின் திருநக்ஷத்திரத்தை முன்னிட்டு, அவரைப் பற்றி அரிய பல விஷயங்களைத் தொகுப்புகளாக வழங்கி வருகிறோம். அந்த வகையில், இன்று 5 ஆம் பகுதியாக, சாதாரண பிரஜையின் குறையை தீர்த்த கூரமாநகர் அரசர் என்ற தலைப்பில் இங்குக் காணலாம்.
ஆழ்வான் அவதரித்த கூரம் என்கிற இடம், பழங்காலத்திலே கூரமாநகர் என பிரசித்தி பெற்ற ராஜ்யமாக இருந்தது. அதில் இவர் தாமே அரசாட்சி செய்து வந்தார்.
ஒரு நாள் இரவு நகர்வலம் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு வீட்டில் கதவை தாளிட்டு சில பேர் பேசிக்கொண்டிருந்தார்கள்.
உண்மையை அறிய, ஆழ்வான் அவர்கள் வீட்டின் திண்ணையில் அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார். அவர்கள் அந்த வீட்டுத்தலைவரின் பெண்ணைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.
அவர்கள் பேசியதாவது, “இந்தப் பெண்ணின் ஜாதகப்படி அவளை மணம் புரிபவன், திருமணம் ஆன சிறிது காலத்திலேயே இறந்து விடுவான். இதை அறிந்த யாரும் இந்தப் பெண்ணை மணம் புரிய முன் வரவில்லையே”, வயது வந்த இந்தப் பெண்ணை வீட்டில் வைத்து இருந்தால் உலகம் பழிக்குமே.
எனவே, இவளைக் கொன்று விடுவதே நல்லது என்று பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டார். மறுநாள் அவர்களை ராஜசபைக்கு வரவழைத்து, முதல் நாள் இரவு உங்கள் வீட்டில் பேசிக் கொண்டிருந்ததை சொல்ல வேணும் என்று கேட்டார்.
அவர்களும், ஒன்றையும் மறைத்திடாது உள்ளபடியயே சொன்னார்கள். ஆழ்வான் அதைக்கேட்டு, குடிமக்களின் வருத்தத்தைத் தீர்ப்பது ஒரு அரசனின் கடமை. எனவே, உங்கள் பெண்ணை நான் மணந்து உங்கள் வருத்தத்தைத் தீர்க்கிறேன் என்று அறுதியிட்டார்.
பெண்ணின் பெற்றோர்கள் “தேவரீர் மணந்தால் அவள் ஜாதகப்படி தேவரீர் உயிர் மாய நேரிடுமே. இந்த நாடு ராஜா இல்லாமல் ஆகிவிடுமே” என்று வருத்தம் தெரிவித்தார்கள். அதற்கு ஆழ்வான் “நான் சிற்றின்பத்தை விரும்பினால் அன்றோ அப்படிப்பட்ட தீங்கு விளையும். எனக்கு சிறிதும் விருப்பமில்லை.
விவாஹத்திற்கு இரண்டு பலன்கள் உண்டு, அவையாவன, 'தர்மத்தை நிலைநாட்டுவதும்', 'குழந்தைச் செல்வங்கள் பெற்றுக் கொள்ளுவதும்' ஆகும். நான் தர்மத்தை நிலைநாட்டுவதற்காக மணந்து கொள்கிறேன், என்று சொல்லி அந்தப் பெண்ணை மணந்து கொண்டார்.
இதனால் ஆழ்வானின் இந்த நல்ல குணங்கள் வெளிப்படுகின்றன.
1.ராஜாவாக இருப்பவன் குடிமக்களின் விருப்பத்தை நிறை வேற்றவேண்டும்.
2.சிற்றின்பத்தில் பற்று இல்லாமை.
3.சாதாரண குடும்ப விருத்தியைக் காட்டிலும் விசேஷ தர்மமான தர்மாநுஷ்டமானமும் முக்கியம்.
4. ஜீவஹிம்ஸை (உயிர்களை வதைத்தல்) தவிர்த்தல்
ஆழ்வானின் மனைவியின் பெயர் ஆண்டாள், ஆழ்வானைக் காட்டிலும் இவருக்கு சிறப்பு அதிகம். சாஸ்த்ரங்களிலும், அதன் அர்த்தங்களிலும் ஆழ்வானுக்கு ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால், தனது மனைவியிடம் கேட்பார் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள்.
அதைவிட முக்கியமான சிறப்பம்சம் ஒன்று உள்ளது. ஆழ்வான் எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தபோதிலும், அதை அனைத்தையும் துறந்து இராமாநுசரின் திருவடியை அடைந்த பொழுது ஆழ்வானுடன் தானும் உடன் சென்றது ஆண்டாளின் வைராக்யத்தை அல்லவா காட்டுகிறது
Comments