top of page

Srirangam Ekadashi: பகல்பத்து 2 ஆம் நாள்.. நம்மாழ்வார் நாதமுனிகளின் தாளங்கள்!!

Vaikuntha Ekadashi 2021: ஸ்ரீரங்கத்தில் பகல்பத்து விழாவின் இரண்டாம் நாள் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. முதன்மையாக நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், இராமாநுஜர் ஆகியோர் எழுந்தருளினர்.


பகல்பத்து திருவிழா நேற்று (4-12-2021) தொடங்கியது. நேற்று நம்பெருமாள் அழகிய திருவாபரணங்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்ததைப் பற்றி இங்கு க்ளிக் செய்து பார்க்கலாம். இதனைத் தொடர்ந்து இன்று (5-12-2021) இரண்டாம் நாளில் பகல்பத்து திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.


கட்டியம் சேவித்தல்:

கட்டியக்காரர்கள் கட்டியம் முழக்க (சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர்கள்) நம்பெருமாள் காயத்ரி மண்டபத்திலிருந்து சந்தனு மண்டபத்துக்கு எழுந்தருளினார். மேற்புறமாகத் திரும்பி சிம்மகதியில் மேலப்படிக்கு வந்தார். ஸ்தலத்தார்கள் மரியாதை ஆனதும், படியிறங்கி, நம்மாழ்வார்,திருமங்கை ஆழ்வார், உடையவர் பின்தொடர அர்ச்சுன மண்டபத்துக்கு எழுந்தருளினார்.


நம்பெருமாள் எழுந்தருளி வரும் வழியை ஒழுங்குபடுத்த, தங்கப்பூண் ஏந்திய சாத்தாத ஸ்ரீவைஷ்ணவ கைங்கர்யபரர்கள்

'எச்சரிக்கை! சரிக்கை!! .. ச்சரிக்கை!!' என்று உரக்கச் சொல்லிக் கொண்டே வந்தார்கள். பக்தர்கள் பேசாமல் அமைதியாய் இருக்க 'பேசாதே! சத்தம்!!" என்று உரக்கச் சொன்னார்கள்.(எல்லா நாட்களிலும் இவ்வாறே !)


நம்பெருமாள் அலங்காரம்:

நம்பெருமாள் சவுரிக் கொண்டை , வைர அபயஹஸ்தம் , வைர காது காப்பு, தங்க கிளி, நெல்லிக்காய் மாலை , பவள மாலை ,தங்க பஞ்ஜாயுத மாலை , பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.



அரையர் சேவை:

இன்று அரையர் சேவையில் பெரியாழ்வார் திருமொழி,


இன்றைய பாசுரங்கள்: "ஆற்றிலிருந்து" பாசுரத்தில் தொடங்கி பெரியாழ்வார் திருமொழி - 240 பாசுரங்கள்
அபிநயம் & வியாக்கியானம்: "ஆற்றிலிருந்து" & "தன்னேராயிரம்" ஆகிய 2 பாசுரங்கள்.

அரையர் ஸ்வாமிகள், பிரத்யேகமான குல்லாக்கள் அணிந்து, நம்பெருமாள் உகந்தளித்த மாலைகளையும்,பரிவட்டங்களையும் அணிந்து கொண்டு, கணீரென்ற குரலில், கையில் தாளங்களை இசைத்தபடி அற்புதமாகப் பாடுவார்கள்.



அரையர்கள் இரண்டு குழுக்களாக, ஒரு நாளைக்கு ஒரு குழுவாக மாற்றி,மாற்றி பிரபந்தம் பாடுவார்கள். இவர்கள் அனைவரும் ஒரே தொனியில், தாளத்தையும்,தப்பாமல் இசைத்து,3-4மணி நேரம்,உணர்ச்சி பொங்கப் பாடுவது காண/கேட்கக் கிடைக்காத அனுபவம்.


நம்மாழ்வார், நாதமுனிகள் தாளம்:


அரையர்கள் ஸ்வாமிகள் இதற்காக விரதம் இருந்து,தங்கள் உடல் வலிமை,குரல் வளத்தை பேணிப் பாதுகாக்கிறார்கள். இவர்கள் இசைக்கும் தாளங்கள், ஒன்றில் நம்மாழ்வார் என்றும், மற்றொன்றில் நாதமுனிகள் என்றும் பொறிக்கப் பட்டிருக்கும். தாளம் இசைக்கும் போது, நம்மாழ்வார் தாளம் மேலாகவும், நாதமுனிகள் கீழாகவும் வைத்திருப்பார்கள்.


நாலாயிரம் திவ்யப்பிரபந்தக் பாசுரங்களை, நம்மாழ்வார் கொடுக்க நாதமுனிகள் வாங்கிக்கொண்ட வைபவத்தை, இது உணர்த்துகிறது. தாளங்களை நம்பெருமாள் திருவடியில் வைத்து எடுத்து இசைப்பார்கள்.



சிம்ம கதி & சர்ப கதி:

காலை ஒரு சிங்கம் குகையிலிருந்து வெளியே வருவது போல் கம்பீரமாக சிம்ம கதியில் புறப்பாடு கண்டருளுவார். இரவு உள்ளே செல்லும் போது பாம்பு போல் வளைந்து, நெளிந்து சர்ப கதியில் நெலிந்து செல்வார்.



நம்பெருமாள் படியேற்றம்: காலை 3 இடங்களில் படியேற்றம் நடைபெறும் 1. கிளி மண்டபம் ஏறுதல் 2. அர்ஜுன மண்டபம் ஏறுதல் 3. துலுக்க நாச்சியார் முன்பு

மாலை மேலப்படியில் படியேற்றம் காண்பார்


அரையர்கள் படியேற்ற நேரத்தில் கொண்டாடங்கள் சொல்வார்கள். 400 வரிகள் இந்த கொண்டாடத்தில் இருப்பதாக கூறுவர்.


இவ்வாறு பெரிய திருநாளில் இரண்டாம் நாள் இனிதே நடைபெற்றது!!


ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!!

171 views0 comments

Commentaires


bottom of page