மார்கழியில் திருப்பாவையின் கொண்டாடம் (Margazhi Thiruppavai) என்ற தலைப்பில் திருப்பாவையின் ஒவ்வொரு பாசுரங்களையும் அதன் மூலமும் விளக்கத்தையும் வழங்குகிறோம். அந்த வகையில், திருப்பாவையின் ஐந்தாம் பாசுரத்தை இங்குக் காணலாம்.
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை *
தூய பெருநீர் யமுனைத் துறைவனை *
ஆயர்குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை *
தாயைக் குடல்விளக்கம்செய்த தாமோதரனை *
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித்தொழுது *
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க *
போயபிழையும் புகுதருவான் நின்றனவும் *
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.
இதற்கு முந்தைய நான்காம் பாசுரத்தின் ஆழ்பொருளை அறிய இங்கு கிளிக் செய்து படியுங்கள்.
விளக்கவுரை:
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
மாயச் செயல்கள் செய்பவனும், (பகவத் ஸம்பந்தம்) நித்தியமாய் எப்போதும் இருக்கிற வடமதுரைக்கு (மதுரா) தலைவனும்,
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
பரிசுத்தமாய் ஆழம் மிக்கிருக்கிற தீர்த்தத்தையுடைய யமுனை ஆற்றிலே விளையாடுபவனும்
ஆயர்குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
இடைக்குலத்திலே அவதாரம் செய்த மங்களதீபம் போன்றவனும்
தாயை குடல் விளக்கஞ்செய்த தாமோதரனை
தனது தாயான யசோதாபிராட்டியின் திருவயிற்றை பெருமை உண்டாகும் படி செய்த கண்ணபிரானை,
நாம் தூயோம் ஆய் வந்து தூமலர் தூவித்தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
ஆயர் சிறுமிகளான நாம் எம்பெருமானை பரிசுத்தமாக சென்று அவனை அடைந்து, நல்ல மலர்களைத் தூவி, வணங்கி, வாயாரப் பாடி, மனத்தால் தியானம் செய்தால்
போய பிழையும்
மேற்சொன்னவாறு அவனை வணங்கினால், எம்பெருமானை அறிந்து அவனை சரண் அடைவதற்கு முன்பு செய்த பாவங்கள்
புகுதருவான் நின்றனவும்
அவனை சரணடைந்த பிறகு நம்மை அறியாமல் செய்யக் கூடிய பாவங்கள்
தீயினில் தூசு ஆகும்
இந்த பாவங்கள் நெருப்பில் இடப்பட்ட பஞ்சு போல உரு தெரியாமல் போகி விடும்
செப்பு
நாம் செய்த பாவங்கள் நோன்புக்கு இடையுறாக நிற்குமோ என்ற சந்தேகம் எழும் போது, அவனை மேற்சொன்ன படி, பாடி தொழுதால் காரியம் சித்திக்கும் என்கிறார்கள்.
ஆழ் பொருளுரை
இந்தப் பாசுரத்தினால் அர்ச்சையாக திவ்ய தேசங்களில் எழுந்தருளி இருப்பதை காட்டப்பட்டது, "வடமதுரை மைந்தன்" என பாடிய படியால்
இந்த பாசுரத்தினால் மூன்று முக்கிய அர்த்தங்கள் சொல்லப்பட்டன. அவையாவன:
யமுனை தூய பெருநீர் ஆனது:
ராம பிரான் சீதையை தேடிய போது, கோதாவரி நதியானது இராவணன் மீதுள்ள பயத்தால் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் வாசுதேவர் குழந்தை கிருஷ்ணனை ஆயர்பாடிக்கு கொண்டு செல்லும் போது, அதன் நீர் வற்றி வழி விட்ட படியால்
கிருஷ்ணனும் ஆயர்பாடி சிறுமிகளும் யமுனையில் விளையாடியதால், கண்ணன் வாய் கொப்பிளித்ததாலும்
இவ்வாறே தூய பெருநீர் ஆனது.
எம்பெருமானை அடைய கர்ம, ஞான, பக்தி யோகங்களை செய்ய தேவையில்லை. அதனை செய்வதற்கும் நமக்கு சக்தி இல்லை. எனவே ஆண்டாளும், ஆழ்வார்களும், ஆச்சாரியர்களும் நமக்கு காட்டிய எளிய வழியான வாயினால் பாடி,மனதில் அவனேயே எப்போதும் தியானித்துக் கொண்டு, மலர்களைக் கொண்டு வழிபட்டு மோக்ஷ ஸித்தியைப் பெறுவோமாக. இதுவே பாசுர சாரார்த்தம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!!
Comments