பிரபந்நர்கள் எந்த ஊரில் மரணமடைந்தாலும் அவர்களுக்கு வைகுண்டம் கிடைக்கும் என்று உரைத்தவர் பெரிய நம்பிகள். அவருடைய வைபவ தினத்தில் அவரைப் பற்றி இன்னும் பலவற்றை இங்குக் காணலாம்.

பிறப்பு:
மார்கழி மாதம் - கேட்டை நக்ஷத்திரம்
அவதார ஸ்தலம் - ஸ்ரீரங்கம்
திருநாமங்கள் - ஸ்ரீபராங்குச தாசர், மஹா பூர்ணர், பெரிய நம்பிகள்
திருகுமாரர் - புண்டரீகாஷர்
திருகுமாரத்தி - அத்துழாய்

பேரருளாளர் அருளிய "ஆறு வார்த்தைகளில்" கடைசி வார்த்தையான "பூர்ணாசார்ய ஸமாஸ்ரய"- பூர்ணாசார்யரான பெரியநம்பிகளை ஆசார்யராக ஏற்றுக் கொள்ளும் படி, காஞ்சி தேவ பெருமாளே ஸ்வாமி ராமனுஜருக்கு திருக்கச்சி நம்பிகள் மூலமாக திருவாய் மலர்ந்தார்.
ஆளவந்தாரின் நியமன படி, இவரே ஸ்வாமி இராமனுஜரை காஞ்சிபுரத்தில் இருந்து அழைத்து வந்தார்.
ஆளவந்தார் காலத்திற்கு பின், ஆளவந்தாரின் மற்ற சிஷ்யர்களது பிராத்தனைக்கு இணங்க, சுவாமி இராமானுஜருக்கு சாமாஸ்ராயணம் செய்து வைத்து ஸ்ரீரங்கம் அழைத்து வர காஞ்சிபுரம் சென்றார். ஆனால் இருவரும் மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவிலில் சந்திக்க நேரிட்டதால், அங்கேயே பெரிநம்பிகள் எம்பெருமானாருக்கு சாமாஸ்ராயணம் செய்து வைத்தார்.
எம்பெருமானார் திருநாராயணபுரம் எழுந்தருளின போது, இவரும் கூரத்தாழ்வானுடன் கிருமி கண்ட சோழனின் சபைக்கு சென்று நம் சம்பிரதாயத்திற்காக அவரது கண்களையும் உயிரையும் தியாகம் செய்த மாஹாநுபாவர்.
கிருமி கண்ட சோழன் சிவனே மேலான தெய்வம் என ஒப்புக்கொண்டு, பெரிய நம்பிகளையும் கூரத்தாழ்வானையும் கையெழுத்திட சொன்னான். ஸ்ரீமந் நாராயணனே பர தெய்வம் என்று நிரூபித்தார். எனவே கோபத்தில் இருவரது கண்களையும் பிடுங்கினான். ஸ்ரீரங்கம் வரும் வழியில் வயது மூப்பு காரணமாக வேதனையால், அங்கேயே சாய்ந்தார். அவரது திருமகளான அத்துழாய் திருவரங்கம் சென்று விடலாம் என கூற, அவர் வர மறுத்துவிட்டார். அவ்விடத்திலேயே திருநாடு அலங்கரித்தார் (பரமபதம் அடைந்தார்). பிரபந்நருக்கு அந்திம தேச நியமம் இல்லை என அவர் கூறினார்.

அதன் விளக்கம்: பிரபந்நர்கள் எந்த ஊரில் மரணம் அடைந்தாலும் அவர்களுக்கு வைகுந்தம் கிட்டும் என்பதை உலகோருக்கு உணர்த்தினார்.
ஆளவந்தாரின் சிஷ்யரான மாறனேர் நம்பி சதுர்த்த வர்ணராயினும், அவருக்கு பிரம்ஹ மேத சம்ஸ்காரம் செய்த பெருமைக்குரியவர். "பாகவத கைங்கர்யத்தை நாமே செய்ய வேண்டுமொழிய வேறொருவரை நியமிக்க முடியாது.ஸ்ரீ ராமபிரான் ஜடாயு என்னும் பறவைக்கு அந்திமக் கிரியைகள் செய்தார்; நான் ராமரை விட உயர்ந்தவன் அல்ல; மாறநேரி நம்பி ஜடாயுவை விடத் தாழ்ந்தவர் அல்ல; எனவே அடியேன் செய்த கைங்கர்யத்தில் தவறில்லை. என கூறி பாகவத கைங்கரியத்தின் பெருமையை உணர்த்தினார்.
ஒரு சமயம் ஸ்ரீரங்கத்தில் சில துர்சம்பவங்கள் நடந்தன. பெரிய பெருமாளுக்கு ஏதேனும் விபரீதம் நேருமோ என அஞ்சிய ஸ்வாமி இராமானுஜர் பெரிய நம்பிகளிடம் விண்ணப்பம் செய்ய, அவரும் ஸ்ரீரங்க எல்லையை சுற்றி மந்திர உச்சாடனம் செய்து கொண்டு போக, அவரை தொடர்ந்து கூரத்தாழ்வாரும் மந்திர உச்சாடனம் செய்த மணல் தூவிக்கொண்டே வந்து மணல்வேலி அமைத்தார். இவ்வாறு ஸ்ரீரங்கத்தைப் பெரும் துன்பத்தில் இருந்து காத்தார் ஸ்வாமிகள்.
தனியன்
கமலாபதி கல்யாண, குணாம்ருத நிஷேவயா|
பூர்ண காமாய ஸததம், பூர்ணாய மஹதே நம: ||
எப்போதும் கமலாபதியான ஸ்ரீமந்நாராயணின் கல்யாண குணக்கடலில், ஆழ்ந்திருக்கும், பரிபூரணரான பெரிய நம்பிகளை வணங்குகிறேன்.
பெரிய நம்பிகளின் வாழி திருநாமம்:
அம்புவியில் பதின்மர்கலை ஆய்ந்துரைப்போன் வாழியே ஆளவந்தார் தாளிணையை அடைந்துய்ந்தோன் வாழியே உம்பர் தொழும் அரங்கேசர்க்கு உகப்புடையோன் வாழியே ஓங்கு தனுக் கேட்டைதனில் உதித்த பிரான் வாழியே வம்பவிழ்தார் வரதருரை வாழி செய்தான் வாழியே மாறனேர் நம்பிக்கு வாழ்வளித்தான் வாழியே எம்பெருமானார் முனிவர்க்கு இதமுரைத்தான் வாழியே எழில் பெரிய நம்பி சரண் இனிதூழி வாழியே
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!!
Commenti