Vaigunda Ekadesi 2021: ஸ்ரீரங்கம் பெருமாள் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் இராப்பத்தின் ஐந்தாம் நாள் உற்சவம் இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பெரிய கோவிலில் இன்று நம்மாழ்வார் பாசுரங்கள் அரையர்களால் சேவிக்கப்படும். ஸ்ரீரங்கம் திருக்கோவிலில் நடைபெறும் சிறப்பு வைபவங்களை இங்குக் காணலாம்.
இன்றைய பாசுரங்கள்: 5-ஆம் பத்து - 110 பாசுரங்கள்
அரையர் அபிநயம் & வியாக்கியானம்:
இந்த பாசுரம் அரையர்களால் அபிநயம் செய்யப்படும்.
ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே,
நீராய் அலைந்து கரைய வுருக்குகின்ற நெடுமாலே,
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்க் திருகுடந்தை,
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே!
நம்பெருமாள்
வைரமுடி கிரீடம்
சிகப்பு மற்றும் வைர ரங்கூன் அட்டிகை,
தாயார் - அழகிய மணவாளன் பதக்கம்,
அடுக்கு பதக்கங்கள்,
காசு மாலை,
முத்து இரட்டைவட சரம்,
பின் சேவை புஜகீர்த்தியுடன் சந்திரஹாரம்
வைர அபய ஹஸ்தம்
ஆகிய திருவாபரணங்கள் அணிந்து, ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்துக் கொண்டிருக்கின்றார்.
ஆரா அமுதே' பாசுரமும், அரையர் சேவையும்:
திருமங்கை ஆழ்வார் காலத்துக்குச் சில ஆண்டுகளுக்குப் பின் திவ்யப்பிரபந்தங்களே, சேவிப்பார்கள் இல்லாமல் மறைந்து போகின.
அந்தக் காலத்தில், கர்நாடகா--மேல்கோட்டையிலிருந்து வந்த சில அடியார்கள், திவ்ய பிரபந்தத்தில் உள்ள "ஆராஅமுதே" என்று தொடங்கும் இந்தப் 11 பாசுரங்களை பாடிக் கொண்டு காட்டு மன்னார் கோவிலுக்கு வந்தனர்.
அப்போது அங்கு உள்ள பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த ஸ்ரீமந் நாதமுனிகள் இந்தப் பாசுரங்களைக் கேட்டு, ஆனந்த ஆச்சர்யமடைந்து, 11 ஆம் பாசுரத்தில் உள்ள "குருகூர்ச் சடகோபன்" என்னும் பதத்திலிருந்து, இவை தோன்றிய இடமான குருகூரைத் தேடிச் சென்று, ஆழ்வார்திருநகரி எனும் திவ்ய தேசத்தை அடைந்தார்.
அங்கு, நம்மாழ்வாரை சேவித்துக் கொண்டு மதுரகவி யாழ்வார் பாடிய "கண்ணிநுன் சிறுத்தாம்பு" பாசுரங்களை 12000 முறை நிஷ்டையுடன் சேவித்தார்.
நம்மாழ்வாரும் ஸ்வாமி ராமானுஜரும்:
அப்போது நம்மாழ்வார் அவர் முன்பு தோன்றினார். அவரிடமிருந்து, நாலாயிரத்தையும் பெற்றார். நாலாயிரத்தோடு "பவிஷ்யதாசார்யர்" ஸ்வாமி இராமாநுஜர், நம்மாழ்வார் விக்ரகத்தை நாதமுனிகளுக்குத் கொடுத்தருளினார்.
பொலிக பொலிக பொலிக!* போயிற்று வல் உயிர்ச் சாபம்*
நலியும் நரகமும் நைந்த* நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை*
கலியும் கெடும் கண்டுகொண்மின்* கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்*
மலியப் புகுந்து இசைபாடி* ஆடி உழிதரக் கண்டோம்
எனும் (5-2-1) பாசுரத்தில், பவிஷ்யதாசார்யராக அவதரித்த சுவாமி ராமானுஜரை கொண்டாடுவதாகவும் ஆழ்வார் உரைத்தார்.
அந்த அற்புதமான பாசுரமும் இன்று அரையர் சேவையில் இசைக்கப்படுகிறது. அதனாலே, நம்பெருமாளும் இன்னும் பொலிவுடன் எழுந்தருளி சேவை சாதித்தார்.
சீலம்கொள் நாதமுனிகள்
ஆழ்வார் அருளித் தந்த நாலாயிரத்தையும், ஆழ்வார்கள் அவதரித்த வரிசையில் பிரித்து, தொகுத்து, பண்/தாளம் அமைத்து இன்றுள்ள முறையில் நமக்குத் தந்தருளிய வள்ளல், சீலம்கொள் நாதமுனிகள். இசையுடன் அரையர் சேவையைத் தொடங்கக் காரணமாக இருந்தவர். அவரது பரம்பரையில் அவதரித்தவர்களே இன்று வரை உள்ள அரையர் ஸ்வாமிகள்.
நம்பெருமாள் வீணை வாசிப்பு கைங்கரியம் முத்தமிழ் விழாவில் தமிழ்வேதமான, திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை அரையர்கள் தாளம் இசைத்துப் பாடுவார்கள்.
வீணை இசைக் கலைஞர்கள், சில பிரபந்தப் பாசுரங்களை பலவகை அமிர்தமான ராகங்களில்,யாழ்(வீணை) இசைத்தும், வாய்ப்பாட்டாகவும் பாடுவார்கள்.
இராப்பத்து நாட்களில் நம்பெருமாளின் இரவுப் புறப்பாட்டில், நாழிகேட்டான் வாசலிலிருந்து, மேலப்படி ஏறும்வரை, நம்பெருமாள் சுமார்1.30 மணி நேரம் இந்த அற்புதமான இசையைக் கேட்டுக்கொண்டு வருவார்.
சாந்தோக்ய உபநிஷத்தின்படி, வீணையில் இசைக்கப்படும் இசை எல்லாம் சேர்ந்து பரப்ரம்மமான ஸ்ரீமந்நாராயணனை போற்றுமாம்.
மேலும் வீணை இசையே மஹாலக்ஷ்மித் தாயாரின் ஒரு வடிவம் என்கிறது உபநிஷத்.
உடையவர் நியமித்து அருளிய வீணாகானச் சேவை: திவ்யப் பிரபந்தங்களில் பெரிதும் ஈடுபட்டிருந்த உடையவர், பல பாசுரங்களிலும் ஆழ்வார்கள் யாழிசையை பாடியுள்ளார்கள்.
எனவே, ஸ்வாமி இராமானுஜரும் பெரியபெருமாள் கேட்டு உகக்க வேண்டும் என்று கருதி, வீணை இசைக்கும் கைங்கரியத்தை ஏற்பாடு செய்தார்.
பெருமாள் வீணை கானம் கேட்டருளும் சமயங்கள்:
திருப்பள்ளி எழுச்சியின் போது - 'கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான்' எனும் திருப்பள்ளி எழுச்சி பாசுரம்.
இரவில் திருக்காப்பு சேர்க்கும் போது - 'மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே என்னும் பெருமாள் திருமொழி பாசுரம்.
வைகுண்ட ஏகாதசி இராப்பத்தில்
மற்ற சில உற்சவங்களில்
பெருமாள் புறப்பாட்டின் போது வீணை கானம் சேவிக்கப்படும்.
மேலும் சில வைபவங்களை மற்றொரு பதிவில் காணலாம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!!
コメント