ஸ்ரீரங்கம் கோவிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்று கைசிக ஏகாதசி. கைசிக ஏகாதசியை முன்னிட்டு விஷ்ணுவின் மீது கைசிக புராணத்தை எழுதிய நம்பாடுவான் என்ற பக்தரின் பக்தியை நினைவுகூரும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
இன்று கைசிக ஏகாதசி.சுமார் 870 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீரங்கத்தில், கைசிக ஏகாதசி/துவாதசி அன்று நடந்த அற்புதங்கள்(ஆறாயிரப்படி குரு பரம்பரா ப்ரபாவத்தில் உள்ளபடி:
ஸ்ரீரங்கத்தில் கைசிக ஏகாதசியன்று, ஸ்ரீபராசர பட்டர் கைசிக புராணம் வாசித்தார். அன்று, பட்டர் வெகு விசேஷமாக, அளவற்ற ஞானத்துடனும், ஒவ்வொரு பதத்திற்கும் இதுவரைக்கும் கேளாத,அதிவிசேஷார்த்தங்களை பிரவாகமாக உபதேசித்து அருளினார். கூடியிருந்தோரெல்லாம் இவரது வாக்பிரவாகத்தில் கட்டுண்டு கிடந்தனர். அரங்கனின் அந்த அர்ச்சை சொரூபத்தில் கூட,மார்பும் தோளும் விரிந்து பூரித்தது. தாம் சாத்தியிருந்த மாலையை கழட்டி, சாதிக்கச் சொன்னார். திருப்தியடையாது தாம் சாத்தியிருந்த பட்டுப் பீதாம்பரத்தைப் போர்த்தினார். அப்பவும் திருப்தியடையவில்லை. தம்முடைய திவ்ய திருவாபரணத்தினை எல்லாம் கழட்டி, பட்டரை அணியச் செய்வித்தார். இவ்வளவு செய்தும் அரங்கன் திருவுள்ளம், அப்போதும் திருப்தியடைய வில்லை ! தாம் எழுந்த
ருளிய சிம்மாசனத்தினைக் கொடுத்து பட்டரை தம் எதிரே அமரச் செய்தார். வேறு பல அரிய பஹுமானங்களைக் கொடுத்தார். கொடுத்த அரங்கன்
இதனால் எல்லாம் திருப்தியடையவே இல்லை. பட்டரும் இதனால் எல்லாம் மகிழ்ந்து பூரிக்கவுமில்லை! ‘இவர்க்கு இதெல்லாம் விட சிறந்தது எது கொடுப்போம்’ என்று யோசிதந்த பெருமாள் மிக உகந்து,
”பட்டரே! உமக்கு மேலை வீடு(பரமபதம்) தந்தோம்” என்று அருளினார்.
இதுநாள் வரை யாரிடமும் சொல்லாத ஒரு சொல்லைச் சொன்னார். அப்போது பட்டரின் மார்பும் தோளும் சந்தோஷத்தினால் பூரித்தன.
"மஹா ப்ரஸாதம்"என்று அங்கீகரித்து, அந்த சந்தோஷத்துடனே தண்டன் சமர்ப்பித்தார் பட்டர். க்ருதக்ஞையோடு நமஸ்கரித்தார் அரங்கனிடத்துச் சொன்னார்.
"நாயன்தே! தேவரீர் அர்ஜூனனிடத்து ‘மோக்ஷயிஷ்யாமி’ என்று அருளிச் செய்தருளினீர்.ஆனால் தேவரீர் தாமே இப்படித் திருவாய் மலர்ந்து அருளப்
பெற்ற, இப்பேற்றுக்கு அடி-- உடையவர் (அடியேனுக்கு) தேவரீர் திருவடிகளில் காட்டிக் கொடுத்த உறவும், ஆழ்வானோடு உண்டான குடல் துடுக்கும்(தந்தை உறவு), எம்பார் அருளுமிறே"என்று விண்ணப்பம் செய்தார்.
நம்பெருமாளைப் பரமபதத்தில் அனுபவிக்கும் பட்டர்:
கூடியிருந்த வைணவர்கள அனைவரும் கடல் போன்று கலங்கினார்கள்.
"அரங்கன்தான் உகப்பினால் திருவாய் மலர்ந்தருளினால் தேவரீர் ஏன் அதை அங்கீகரிக்க வேணும்? உம்மைக் கொண்டு இந்த பூமியினைத் திருத்தி விடலாம் என்றே பெருமாள் திருவுள்ளம் பற்றி இருந்தாரே !"என்று பதறினார்கள். அதற்குபட்டர்,"இவ்விபூதியும்,இவ்விபூதியில் உள்ளாரும் பாக்ய ஹீநரானால் அடியேன் செய்வதென்? நாய்க்குடலுக்கு, நறுநெய் நொங்குமோ?என்னை இவ்விபூதி பொறுக்குமோ?இன்னம் சிறிது நாள் இங்கே அடிமை கொண்டருளில் பரமபதத்திற்கும் இப்புவிக்கும் சுருளும்படியும்(பரமபதம் என்னும் மாடிக்குச் செல்லும் படிப்பாலம்) கட்டேனோ?" என்றார். அதே சமயம் நம்பெருமாள் அழகில் நிலைநின்ற பட்டர், ”நாயன்தே ! ஆஸநபத்மத்திலே அழுந்தியிட்ட திருவடித்தாமரைகளும், அஞ்சேல் என்ற கையும், கவித்த முடியும், முறுவல் பூரித்த சிவந்த திருமுக மண்டலமும், திருநுதலில் (நெற்றியில்), கஸ்தூரித் திருநாமமும், பரமபதத்திலே கண்டிலேன் ஆகில், அங்குள்ள ஒரு மூலையினை முறித்துக் கொண்டு குதித்து மீண்டும் வருவேன்" என்று விண்ணப்பம் செய்தார்.பட்டர் இன்றுவரை பரமபதத்தைக் கிழித்துக் கொண்டு குதித்து வராததால், அங்கு பரவாசுதேவர், பட்டர் சேவித்து, வர்ணித்த அழகிய மணவாளராகவே அவருக்கு சேவை சாதிக்கிறார் என்று கொள்ளலாம்!!.
பட்டருக்கு ப்ரஹ்மரதம்:
பட்டர் மூலஸ்தானம் சென்று பெரியபெருமாளையும், உற்சவரையும் ஆபாத சூடம் அனுபவித்து,கோயில் ஆழ்வாரையும்,ஆழ்வாரையும் கண்ணார சேவித்து நின்றார். பெருமாள் தம் பரிசாரகர்கள் அனைவருடனும், ப்ரமஹரதம் பண்ணுவித்து, கோயில் அனைத்துக் கொத்து கைங்கர்யபரர்களும், அகில ஸ்ரீவைஷ்ணவர்களும், எல்லா ஆச்சார்யர்களும்,
விப்ரவர்க்கமும்(பக்தர்களும்) சூழ்ந்து சேவித்து வர, பட்டர் தம் திருமாளிகையினுள் எழுந்தருளினார்.
ஈன்ற பொழுதில்,பெரிதுவந்த உன்னதத் தாய்:
திருமாளிகையில் தம் திருத்தாயார் ஆண்டாளை ஸேவித்தார். ஆண்டாள்,‘நலம் அந்தம் இல்லதோர் நாடு (என்றும் நலத்துக்குக் குறை/முடிவு இல்லாத ஸ்ரீவைகுண்டம்) புகுவீர்!’ என்று ஆசீர்வதித்தார். பட்டரும், ‘அம்மா! அடியேன் வேண்டுவதும் இதே!’ என்று உகந்தருளினார்.
எத்தனை சிறந்த திருத்தாயார்! எத்தனை உயர்ந்த திருமகனார்!!
பறவையேறு பரம்புருடன் கைக்கொண்ட, பட்டர்.
பட்டரின் திருமாளிகையில், கூட வந்தவர்கள் அனைவரையும் வயிறார அமுது பண்ணச் செய்தனர்.அனைவரும் அமுதுண்ட பின், பட்டர் திருமாளிகையின் நடுவில் அமர்ந்தார். திருநெடுந்தாண் டகத்தினை விசேஷமாக வியாக்யானம் செய்தார். "அலம்புரிந்த நெடுந்தடக்கை" என்னும் பாசுரத்தில், ‘அஞ்சிறைப்புள் தனிப்பாகன்” என்கிறவிடத்திலே, ”பறவையேறு பரம்புருடா நீ என்னைக் கைக்கொண்டபின், பிறவி எனும் கடலும் வற்றிப் பெரும் பதமாகின்றதால்” என்று இதனை இரண்டு முறை மெய்சிலிர்த்து அநுஸந்தித்தருளித் செய்தார். மேற்கொண்டு பேச முடியவில்லை! திருமேனி பூரித்து மயிர்க்கால்கள் சிலிர்த்து நின்றது! புன்முறுவல் பூத்தவண்ணம் திருமுடியின் மேல் அவர்தம் இரு கைகளும் குவிந்து நமஸ்கரித்துக் கொண்டு, பின்னாலிருந்த அணையினில் சாய்ந்தார். பட்டரின் சிரக் கபாலம் வெடித்து திருநாட்டுக்கு எழுந்தருளினார் !! (அப்போது பட்டருக்கு இருபத்து எட்டாவது திருநக்ஷத்ரம்-வயது).
திருக்குமாரருக்கு,மங்களாசாசனம் செய்த திருத்தாயார்:
பட்டர் பரமபதிக்கும் போது, அவரது தாயாரான ஆண்டாள் அருகிலுள்ள ஒரு அறையில் அரங்கனைத் தியானித்த வண்ணம் இருந்தார். பட்டரின் சீடர்கள் ஆண்டாளிடத்து, ”பட்டர் இளைத்து எழுந்தருளி யிருக்கிறார்’ என்று பட்டர் பரமபதித்ததை,அறிவித்தனர். அந்த அம்மங்காருக்குத் திருவுள்ளம் கலங்கவில்லை! திருமுகம் கன்றவில்லை! கண்ணீர் மல்கவில்லை!
வண்டு எப்படி பூவானது நோகாமல் அதன் மேல் அமருமோ, அதுபோன்று பட்டரது திருமேனியினை அவரது ஹ்ருதயகமலத்தினை அலர்த்தி தன் மேல் சார்த்திக் கொண்டார். "பெருமாளுக்கும், நாச்சிமாருக்கும், பேரிழவும், பெருங்கிலேசமும்,பெருவயிற்றெரிச்சலுமாகச் செல்லாநிற்க,பரமபத நிலையனுக்கும் அங்குள்ள நாச்சிமாருக்கும் பெருவாழ்வும் பெருங்களிப்பும் அடையும்படி இந்த ஆத்மா செல்லுகிறதே! உடையவன் உடைமையைக் கைக்கொண்டால், நாம் வெறுக்கலாமோ?” என்று ஆண்டாள் அரற்றாமல் அமைதியாயிருந்தார் !!!
திருமகனை இழந்து வாடிய பெரியபெருமாளும்,பெரியபிராட்டி யாரும்!!
கோயிலார்கள் அனைவரும் அனைத்துமே பறிபோனது போன்று கலங்கி கண்ணீர் வடித்தனர். நஞ்சீயர் வேரற்ற மரம் போல சோகமே உருவாய் வீழ்ந்து கிடந்தார்.கூடியிருந்தோர் கண்ணீர் மழை சொரிந்தனர்!நம்பெருமாளும், தாயாரும், திருமுத்துக்குடை, காளாஞ்சி, திருவெண்சாமரம், திருவாலவட்டம், திருவெண் கொற்றக்குடை, வெண்முத்தின் கலசம், மேற்கட்டு முத்து தாமம் போன்றவற்றினை கோவில் சார்பில் அனுப்பிவைத்து, ‘நம்முடைய அவப்ருதோத் ஸவம்(திருமஞ்சன உத்ஸவம்) கொண்டாடுமாப்போல் பட்டருக்கும் அவப்ருதோத்ஸவம் கொண்டாடுங்கோள்” என்று திருவுள்ளமாய், பெருமாளும் நாச்சிமாருமாய் திருமஞ்சனம் கண்டருளி, ‘இப்போது நமக்குச் செவ்வாய் வக்ரமாய்த்து' என்று திருவுள்ளம் நொந்து,"நாம் புத்ரனை இழந்தோமே!’ என்று சுருளமுதும் (வெற்றிலை) அமுது செய்யாமல்,முசித்து (வருந்தி)எழுந்தருளியிருந்தனர்.
நஞ்சீயர் உள்ளிட்ட முதலிகள் பட்டரின் திருத்தம்பியார் வேதவியாசப்பட்டரைக் கொண்டு பட்டருக்கு ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரம் செய்து, அவப்ருதோத் ஸவமும் நம்பெருமாள் திருவுள்ளப்படிச் செய்து மீண்டு வந்தனர். பட்டரது பிரிவினால் வெறிச்சோடிப் போன திருமாளிகையினைக் கண்ட,வேதவியாச பட்டர் மனம் வெதும்பிச் சோகித்து கீழே புரண்டு அழுதார். துணுக்குற்ற ஆண்டாள்,"இவர் ஆழ்வான் திருவயிற்றிலே பிறக்கத் தக்கவரல்லர்" என்றருளிச் செய்து,"குழந்தாய் ! பட்டர் பெற்ற பேற்றைக் கண்டு பொறாமையோ?"என்றாராம்.சீராமப் பிள்ளையும் (வேதவியாச பட்டர்) சோகத்தை விட்டு உடனே எழுந்திருந்து ஆண்டாள் திருவடிகளிலே தண்டம் சமர்ப்பித்து, "அபசாரப்பட்டேன்;பொறுத்தருள வேணும்" என்று க்ஷமை வேண்டினார்.
ஸ்ரீபராசர பட்டர் தனியன்:
"ஸ்ரீ பராஸர பட்டார்ய ஸ்ரீரங்கேச புரோஹித: |
ஸ்ரீவத்ஸாங்க ஸுத: ஸ்ரீமான் ச்ரேயஸே மேஸ்து பூயஸே ||"
"கைங்கர்யஸ்ரீ நிறைந்த புகழாளர்,
ஸ்ரீ ரங்கேசனின் புரோகிதர், ஸ்ரீவத்சாங்கர் கூரத்தாழ்வானின் திருக்குமாரர் ஸ்ரீ பராசர பட்டர் திருவருளால் அனைவருக்கும் சகல மங்களமும் ஆகுக"
😀