இன்று ஞாயிறு கிழமை - மாசி மாதம் - கிருஷ்ண பக்ஷ துவாதசி. இந்நாளில் தான் ஸ்வாமி மாமுனிகள் (16-2-1443) பூலோகத்தை விட்டு மீண்டும் வைகுண்டத்திற்கு எழுந்தருளினார்.
அவர் அவதரித்தது 1371. அவர் ஆதிசேஷனின் அவதாரமாகவே திருவவதரித்தார். ஸ்வாமி இராமானுஜரின் மறு பிறவி. ஆர்த்தி பிரபந்தம், யதிராஜ விம்சதி, திருவாய்மொழி நூற்றந்தாதி போன்றவற்றை பாடியுள்ளார். ஸ்ரீவசந பூஷணம், ஆச்சாரிய ஹ்ருதயம் போன்ற ஆழமான மூல நூல்களுக்கு விரிவான விளக்க உரையையும் எழுதியுள்ளார். இவரை விசதவாக் சிகாமணிகள் என்று கொண்டாடுவர். நம்மாழ்வாரின் திருவாய்மொழியை விரித்துரைத்து ஈடு முப்பத்தாறாயிரப் படி என்னும் விளக்கமான வியாக்கியான நூலை எழுதினார்.
ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தின் பூர்வாச்சாரியர்கள் வரிசையில் கடைசி ஆச்சாரியராக கொண்டாடப்படுகிறார். இவர் ஆழ்வார் திருநகரியில் அவதரித்தவர். பிற்காலத்தில் திருவரங்கத்தில் வாழ்ந்து வந்தார்.
1443 ஆம் வருடம் திருநாட்டுக்கு எழுந்தருளினார். இந்நாளை ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் வெகுவிமர்சையாகக் கொண்டாடுவார். ஒவ்வொரு ஆண்டும் மாமுனிகளின் திதி சிரார்த்த உற்சவம் அவரது சன்னதியில் நடைபெறும். இந்த உற்சவத்தின் தனிசிறப்பு நம்பெருமாள் தானே முன்நின்று நடத்தி வைக்கிறார்.
தகப்பனார் மரணம் அடைந்தால் மகன் சடங்குகளை செய்வார். அதன் பிறகு ஆண்டுதோறும் திதி சிரார்த்தங்களை செய்வார். அதே போலவே சிஷ்யரும் ஆச்சாரியனுக்கு இந்தக் கடமைகளை செய்ய வேண்டும். பஞ்ச சம்ஸ்காரம் செய்த நம் ஆச்சாரியர் பரமபதித்தால் சிஷ்யருக்கு தீட்டே உண்டு. இதனை நினைவில் கொள்க.
இப்போது மணவாளமாமுனிகள் பரமபதித்தார். அவருக்கு சிஷ்யன் யார்? அதான் இங்கு மிக சுவையான செய்தி! ஸ்ரீரங்கத்தில் மணவாளமாமுனிகள் எழுந்தருளிருந்தபோது, ஸ்ரீரங்கநாதனான நம்பெருமாளுக்கு ஒரு ஆசை. மணவாளமாமுனிகள் திருவாய்மொழியின் பொருளை மிக அழகாக எடுத்துரைப்பராம்.
அதனால் மணவாளமாமுனிகள் திருவாய்மொழியினை சொல்ல தானும் சிஷ்யனாய் இருந்து கேட்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். உடனே நம்பெருமாளிடம் இருந்து ஆணை வந்தது. மாமுனிகளும் அதனை ஏற்றுக்கொண்டார். ஸ்ரீரங்கத்து பெரிய திருமண்டபத்தில் (ஆயிரங்கால் மண்டபம்) ஒரு வருடம் எழுந்தருளி திருசெவி சாய்த்தார். தன்னுடைய ஒரு வருட உற்சவங்களையும் நிறுத்தி வைத்தார். ஸ்ரீரங்கத்தில் 365 நாட்களும் உற்சவம். உபன்யாசம், காலக்ஷேபங்களுக்கு நேரம் கிடைக்காது. அதனால் நம்பெருமாள் உற்சவங்களை நிறுத்தி விட்டு திருவாய்மொழி காலக்ஷேபம் கேட்டார். வியாக்யானம் முடியும் சாற்றுமுறை தினத்தில், நம்பெருமாளே ஒரு பாலகனாக உருவெடுத்து, வந்து மாமுனிகளை, ஆசார்யராக ஏற்றுக் கொண்டதற்கு ,ஆசார்ய சம்பாவணை யாக, ஒரு தனியனைச் சுவடியில் எழுதிச் சமர்ப்பித்தார். அந்தத் தனியனே நாம் அனைவரும் நாளும் அனுஸந்திக்கிறோம்,
"ஸ்ரீ சைலேச தயாபாத்ரம், தீபக்யாதி குணார்ணவம்,
யதீந்திர ப்ரவணம், வந்தே ரம்ய ஜாமாதரம்முநிம்!!"
அப்போ நம்பெருமாள் மாமுனிகளின் சிஷ்யன் தானே! சிஷ்யன் என்றால் பிள்ளையை போல தானே. அதனால் மாமுனிகள் பரமபதித்த நாளில் இருந்து ஆண்டுதோறும் அவரது சிரார்த்த கைங்கரியத்தை நம்பெருமாளே நடத்தி வைக்கிறார்.
தீர்த்த நாளன்று (இன்று), அரங்கருக்குத் திருவாராதனம் செய்யும் அர்ச்சகரே, மாமுனிகளுக்கும் செய்கிறார்.
நம்பெருமாளுக்குக் காலை நைவேத்யம் இல்லை. மாமுனிகள் தளிகை அமுது செய்த பின்னரே, இவருக்கு நைவேத்யம். (நம் போன்றே நம்பெருமாளும் காலை உபவாசம்!!). இன்று பெருமாள் சுருளமுது (வெற்றிலை) கண்டருள்வதில்லை"
இவ்வாறு ஒரு சிஷ்யன் செய்ய வேண்டிய கடமைகளை நம்பெருமாள் செவ்வனே இன்றளவும் செய்து காட்டுகிறார்.
இந்த நல்ல நாளில் மாமுனிகளையும், அவர்தம் உன்னத சீடர் ஸ்ரீ அழகியமணவாளப் பெருமாளையும், நாம் பிரார்த்தித்துக் கொள்வோம்.
“அடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ,
சடகோபன் தண்தமிழ்நூல் வாழ,
கடல் சூழ்ந்த மன்னுலகம் வாழ,
மணவாள மாமுனியே, இன்னுமொரு நூற்றாண்டு இரும் !!!"
Comments