இன்று (20-09-2021) கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமியின் 632 வருஷ திருநக்ஷத்ரம். ஸ்ரீரங்கத்தில் அண்ணன் சுவாமி திருமாளிகையில் அவரது திருநக்ஷத்ரத்தையொட்டி 10 நாள் உற்சவம் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இந்த நன்நாளில் அவரது வைபவங்களில் சிலவற்றை காண்போம்.
அண்ணன் என அழைக்கப்பட காரணம்:
அண்ணன் ஸ்வாமி ஒரு நாள் கூட தவற விடாமல், அரங்கரின் விஸ்வரூப தர்சனத்துக்கும்/புறப்பாட்டுக்கும் வந்து விடுவார்.
ஸ்ரீரங்கத்திலுள்ள சிலர் இவரிடம், ஒரு நாள் அரங்கரைச் சேவிக்க முடியா விட்டால்என்னாகும் என்றனர். இவர் அப்படித் தவறினால், தம் கண்களை இழந்து விடுவேன் என்றார். இவர் அப்படித் தவறினால்,தம் கண்களை இழந்து விடுவேன் என்றார். இவரைச் சோதிக்க விரும்பிய அவர்கள் இவருக்குத் தெரியாமல் கோவில் அர்ச்சகர்களிடம் கூறி, ஒரு நாள் அதிகாலையில் மிகச் சீக்கிரமாகவே விஸ்வரூபம் நடத்திவிட முடிவுசெய்தனர்.
அப்படிச் செய்ய முயன்றபோது, அவர்களால் கோவில் கர்ப்பக் கிரகக் கதவுகளைத் திறக்க முடியாமல் ஏதோ அடைத்திருந்தது போலிருந்தது. அவர்கள் திறக்க முயன்று கொண்டிருந்தபோது, வரதநாராயண குருவின் திருமாளிகையில் அவரது தம்பி அவரை, "அண்ணா,எழுந்திருங்கள், விஸ்வரூபத்துக்கு நேரமாகிவிட்டது" என்று எழுப்பினார். அண்ணன் உடனே எழுந்திருந்து அவசரமாக நீராடிவிட்டு, திருமண்காப்பு இட்டுக்கொண்டு பெரிய கோவிலுக்கு விரைந்தார். தம்பியும் அவருடன் சென்றார். கோவில் த்வஜஸ்தம்பத்துக்கு அருகில், இருவரும் தண்டனிட்டு நமஸ்ஹாரம் செய்தனர். அதன்பின் தம்பியைக் காணவில்லை.
கோவில் கதவுக்குப் பக்கத்தில் சென்றவுடன், அனைவரும் வியக்கும்படி கோவில் கதவுகள் தாமாகவே திறந்து கொண்டன. அங்கிருந்தோர் அனைவரும் வரதநாராயணரின் பக்தி நிஷ்டையைக் கண்டு போற்றி வணங்கினர். திருவரங்கர் அர்ச்சக முகேன ஆவேசித்து,தாமே அவர் திருமாளிகைக்குச் சென்று 'அண்ணா'என்று எழுப்பியதைச் சொல்லி,இனி மேல் வரதநாராயணரும், அவர் சந்ததிகளும் 'அண்ணன்' என்று அழைக்கப்படுவர் என்று அருளினார். அன்றிலிருந்து அவர் 'கோவில் கந்தாடை (முதலியாண்டான் திருக்குமாரரின் பட்டப்பெயர்) அண்ணன்' என்றழைக்கப்பட்டார். அவரின் சந்ததியினருக்கும் இந்தக் 'கோவில் அண்ணன்' என்னும் பெயர் வழங்கலாயிற்று.
மாமுனிகளை ஆஸ்ரயித்த விதம்:
அண்ணன் ஸ்வாமிகளும் அவர் சகோதரர்களும் ஸ்ரீரங்கத்தில் கோவில் மரியாதைகளுடன் புகழ் பெற்ற ஆசார்யர்களாக விளங்கி வருகையில், மணவாள மாமுனிகள் ஆழ்வார் திருநகரி யிலிருந்து ஸ்ரீரங்கம் எழுந்தருளினார். அரங்கனின் அநுக்ரஹமும், அவருடைய தேஜஸும் ஸ்வாமி மாமுனிகளுக்கு பல சீடர்களைப் பெற்றுத் தந்தது.
ஒரு நாள் அண்ணன் ஸ்வாமி அவர் திருமாளிகை திண்ணையில் ஓய்வெடுத்து இருக்கையில், மாமுனிகள் மடத்திலிருந்துஒரு ஸ்ரீவைஷ்ணவர் வந்து கொண்டிருப்பதைப் பார்த்த அண்ணன் அவரை அழைத்து, நீர் யார்? எங்கிருந்து வருகிறீர்?என்று கேட்டார். அவர் தம் பெயர் சிங்கரையர் என்றும்,அருகில் உள்ள வள்ளுவ ராஜேந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் பெரியஜீயரிடம் (மாமுனிகள்) சீடராக விரும்பி வந்து கொண்டிருப்பதாகவும் கூறினார். அதற்கு அண்ணன் ஸ்வாமி, ஸ்ரீரங்கத்தில் பல ஆசார்யர்கள் இருக்கும் போது,ஏன் மாமுனிகளிடமே சீடராக வேண்டும் என்றார். சிங்கரையர் அது பெருமாளின் திருவுள்ளம் என்றும்,பரம ரஹஸ்யம் என்றும் மேற்கொண்டுஎதுவும் சொல்ல முடியாதென்றும் கூறிவிட்டார்.
இதைக் கேட்டு ஆச்சர்யப்பட்ட அண்ணன், அவரை உள்ளே அழைத்து பிரசாதம்,தாம்பூலம் அளித்து அன்றிரவு அவர் திருமாளிகையிலேயே தங்கும்படி சொன்னார். அன்றிரவு மேலும் அவரிடம் விவரம் கேட்க, அவரும் அந்த அரிய வைபவத்தைச் சொன்னார். அவர் தாம் மாமுனிகள் மடத்துக்கும், மற்ற திருமாளிகைகளுக்கும் காய்கறிகள் முதலானவற்றைக் கொடுத்து வருவதாகவும், மாமுனிகள் அவற்றை மடத்தில் சேர்க்கும் முன்,அவரிடம்"இவை எங்கே விழைகின்றன?யார் தண்ணீர் பாய்ச்சுகிறார்கள்?யார் அறுவடை செய்கிறார்கள்" என்று பலவாறு கேட்டுத் திருப்தியடைந்த பின்பே கொடுக்கச் சொன்னார் என்றார். அவை ஸ்ரீவைஷ்ணவர்களின் தோட்டத்தில் விளைந்ததாகவும்,அதன் தொடர்பான வேலைகளைச் செய்பவர்களும் ஸ்ரீவைஷ்ணவர்களே;சிலர் மாமுனிகளின் சீடர்களும் ஆவார்கள் என்று மாமுனிகளிடம் சிங்கரையர் சொன்னாராம்.
மாமுனிகள் அவரிடம் பெரியபெருமாளைச் சேவித்து ஊர் திரும்புமாறு,அருளியதால் கோவிலுக்குச் சென்ற அவருக்கு அர்ச்சகர் தீர்த்தம், சடாரி, பிரசாதம் சாதித்து, அபயஹஸ்தமும்
அளித்தார். மாமுனிகளின் ஆசார்ய சம்பந்தமும் விரைவில் கிட்டும் என்று ஆசீர்வதித்தார். சிங்கரையர் மீண்டும் மாமுனிகள் மடத்துக்குச் சென்று அவரிடம் நன்றி கூறி விடைபெற்றுச் சென்றாராம்.
செல்லும் வழியில் மடத்திலிருந்து கொடுத்தனுப்பிய பிரசாதத்தை உட்கொண்டதாகவும், ஆசார்ய பிரசாத மகிமையால் அவரது ஆத்மா சுத்தியடைந்தது என்றார். அன்றிரவு, கனவில் அவர் பெரியபெருமாள் சந்நிதியில் சேவித்துக் கொண்டிருப்பது போலவும், அப்போது பெருமாள், அவர் சயனித்திருக்கும் ஆதிசேஷனைக் காட்டி "அழகிய மணவாள ஜீயர் (மாமுனிகள்) ஆதிசேஷனுக்குச் சமம்; நீர் அவர் சிஷ்யனாகக் கடவது" என்று அருளினார் என்று சொல்லி முடித்தார். இதைக் கேட்டுப் பெரிதும் வியந்தார் அண்ணன் ஸ்வாமி. இந்த வைபவம் அண்ணன் மாமுனிகளிடம் ஆஸ்ரயிப்பதற்கான முதல் தூண்டுகோலாக இருந்தது.
சிங்கரையர் வைபவத்தைக் கேட்டு அதையே எண்ணிக் கொண்டு உறங்கிவிட்டார் அண்ணன்.அன்றிரவு அவரும் ஒரு கனவு கண்டார்!அந்தக் கனவில் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் மாடியிலிருந்து இறங்கி வந்து இவரைச் சவுக்கால் அடித்தார்!பிறகு இவரையும் கூட்டிக் கொண்டு மாடிக்குச் சென்றார்; அங்கு ஒரு சந்யாசி மிகவும் கோபமாக அமர்ந்திருந்தார். அவரும் அண்ணனைச் சவுக்கால்அடித்தார்;அழைத்துச் சென்ற ஸ்ரீவைஷ்ணவர் சந்யாசியிடம்"இவன் சிறுபிள்ளை; தான் செய்வதறியாது செய்து விட்டான்" என்றார்.
சந்யாசியும் சாந்தமடைந்து அண்ணனை அழைத்துத் தம் மடிமீது அமரவைத்து "நீயும், உத்தமநம்பியும் தவறு இழைத்து விட்டீர்கள்" என்றார். "மாமுனிகளின் பெருமை அறியாது தவறிழைத்து விட்டேன் அடியேனை மன்னியுங்கள்" என்று வேண்டினார் அண்ணன்.அந்த சந்யாசி"நாம்ஸ்ரீபாஷ்யகாரர் ராமாநுஜர், இந்த ஸ்ரீவைஷ்ணவர் முதலியாண்டான், நாமே ஆதிசேஷன்; இங்கு மணவாள மாமுனிகளாக அவதரித்திருக்கிறோம்.நீரும் உம்சொந்தங்களும், அவரிடம் சிஷ்யர்களாக அடைந்து உய்யப் பாருங்கள்" என்றார்.
கனவு கலைந்து திடுக்கிட்டு விழித்த அண்ணன் ஸ்வாமியின் கண்களிலும், மனத்திலும் ஆனந்தம் பொங்கியது! ஜகதாசார்யரையும், தம் குலபதி முதலியாண்டானையும் சேவித்த ஆனந்தம்!! உடையவரே தம்மைத் திருத்திப் பணிகொண்டு, மாமுனிகளை ஆசார்யராக காட்டிக் கொடுத்த பேறு பெற்ற ஆனந்தம்!!!
அஷ்டதிக் கஜங்களுள் ஒருவரானார்:
மாமுனிகள் கோவில் அண்ணனை தம் அஷ்ட திக்கஜங்களுள் ஒருவராக நியமித்தார். இடைக்காலத்தில் பெரிய கோவிலில் கந்தாடையார்களுக்கு நின்று போன சில மரியாதைகளை மீண்டும் பெற்றுத் தந்தார் மாமுனிகள். அண்ணனுக்கு பகவத் விஷயத்தில்
(திருவாய்மொழி) இருந்த ஞானத்தினால் அவருக்கு "பகவத் சம்பந்த ஆசார்யர்" என்னும் பட்டம் சாற்றினார். கந்தாடை அப்பன், சுத்த சத்வம் அண்ணன் மற்றும் பல ஆசார்யர்களை அண்ணனிடம் ஆஸ்ரயித்து பகவத்விஷ்ய காலட்சேபம் கேட்குமாறு செய்தார். இவ்வாறு பலகாலம் பெரிய பெருமாளுக்கு கைங்கரியங்கள் புரிந்தார்.
கோயில் அண்ணன் ஸ்வாமி வாழித்திருநாமம்:
கோயில் அண்ணன் ஸ்வாமி திருநக்ஷத்ரம்
பேராத நம்பிறப்பை பேர்க்க வல்லோன் வாழியே
பெரிய பெருமாளால் அருள் பெற்றோன் வாழியே
ஏராரு நன்மதியின் ஏற்றமுள்ளோன் வாழியே
எதிரான் தரிசனத்தை எடுத்துரைப்போன் வாழியே
பாரார நன்புகழை படைக்க வல்லோன் வாழியே
பகர் வசனபூடணத்தின் படியுடையோன் வாழியே
ஆராமாஞ்சூழ் கோயில் அவதரித்தோன் வாழியே
அவனிதொழும் கந்தாடையண்ணன் என்றும் வாழியே!!!🙏🙏🙏
புண்ணிய நற் புரட்டாசி பூரட்டாதி
மண்ணில் உதித்த மறையோனே - எண்ணாதியாம்
கன்னி மதிள்சூழ் கோயில் கந்தாடை அண்ணனே
இன்னும் ஒரு நூற்றாண் டிரும்.
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்!!!
Comments