மார்கழியில் தினம் ஒரு திருப்பாவை என்ற தலைப்பில் திருப்பாவையின் ஒவ்வொரு பாசுரங்களையும் அதன் மூலமும் விளக்கத்தையும் வழங்குகிறோம். அந்த வகையில், திருப்பாவையின் முதல் பாசுரமான மார்கழித் திங்கள் பாடலை இங்குக் காணலாம்.
மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளால்,
நீராடப்போதுவீர், போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வ சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏர் ஆர்ந்தகண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச்செங்கண், கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோரெம்பாவாய்.
விளக்கவுரை:
மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளால்,
பெருமானுக்கு உகந்த மாதமான இந்த மார்கழி மாதத்தில் சந்திரன் பூரணமாக விளங்குகிறான். அழகிய இந்நாளில் (நமக்கு ஏற்றவாறு அமைந்துள்ள இந்த நாளில்) என பாவை நோன்புக்கு ஏற்றவாறு அமைந்த இந்த நற் காலத்தைக் கொண்டாடுகிறாள்.
நீராடப்போதுவீர், போதுமினோ, நேரிழையீர்!
அழகிய ஆபரணங்களை அணிந்துள்ளவர்களே!, கிருஷ்ணனை நினைத்து, அவன் மீது பக்தி கொண்டு, அவனையே அனுபவிக்க விருப்பமுடையவர்கள் வாருங்கள்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வ சிறுமீர்காள்!
செல்வம் நிறைந்தத் திருவாய்பாடியில் உள்ள சிறுமிகளே! பகவத் சமந்தமாகிய செல்வத்தையுடைய இளம்பெண்களே!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
கூர்மை பொருந்திய வேலாயுதத்தையுடையவரும், கண்ணபிரானுக்கு தீங்கு விளைவிக்க வரும் அரக்கர்கள், ஜந்துக்கள் மீது கோபத்துடன் கொடுமை செயல் செய்யும் நந்தரின் சிறு பிள்ளை கண்ணன்.
ஏர் ஆர்ந்தகண்ணி யசோதை இளஞ்சிங்கம்
அழகு நிறைந்த திருக்கண்களை உடையவளான யசோதா பிராட்டிக்கு சிங்கக்குட்டி போல் இருப்பவன்
கார்மேனிச்செங்கண், கதிர்மதியம் போல் முகத்தான்
மேகம் போன்ற கருத்த திருமேனியும், சிவந்தக் கண்களையும், சூர்ய சந்திரர்களைப் போன்ற திருமுகத்தையும் உடையவன்
நாராயணனே
மேற்கூறியவாறு வர்ணிக்கப்பட்ட அவனே, இவ்வுலகிற்கு தலைவன் ஆவான். அப்படிப்பட்ட நாராயணன் ஒருவனே
நமக்கே பறை தருவான்
எம்பெருமானை மட்டும் நம்பி இருக்கும் நமக்கு, நமது விருப்பத்தை அறிந்து அதை நிறைவேறி தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்
இவ்வுலகில் உள்ளவர்கள் அனைவரும் பாராட்டும்படி இந்த பாவை நோன்பு விரதம் இருந்திடலாம் தோழியர்களே!!!
ஆழ் பொருளுரை
நாராயணனே என்பதால்
இப்பாசுரத்தினால் எம்பெருமானின் பரத்துவம் சொல்லப்பட்டது.
மார்கழி திங்கள்
ஆண்டாள் கண்ணனை அடைய வேண்டி நோன்பு நோக்க வேண்டும் என ஆசைப்பட்டாள். அவள் ஆசை பட்டவுடன் அந்த நோன்புக்கு தகுந்த காலமும் வாய்த்திருக்கிறது என காலத்தைக் கொண்டாடுகிறாள்.
மேலும் கண்ணன் கீதையில் "மாஸாநாம் மார்க³ஸீ²ர்ஷ: அஹம்" என வாய் மலர்ந்தான். எனவே இம் மாதம் கண்ணன் உகந்த மாதம். இம்மாதத்தில் தான் தேவருக்கு பிரம்ம முகூர்த்தம். மேலும் பூவுலகில் இருக்கும் அனைவருக்கும் ஸாத்வீக குணமே மிகுந்திருக்கும். இவ்வாறு காலத்தை கொண்டாடுகிறாள் ஆண்டாள்.
மதி நிறைந்த நன்னாளால்:
சந்திரன் பரிபூர்ணமாக நிறைந்திருக்கும் பௌர்ணமி நன்னாள்.
நன்னாளால் - என்றைய தினம் ஆசாரியன் திருவடியை ஆஸ்ரயித்து வணங்குகிறோமோ அன்றைய தினம் நன்நாள்.
அப்படிப்பட்ட இந்த நல்ல நாள் இப்போது வாய்த்திருக்கிறது.
நீராட போதுவீர்
பகவத் அனுபவத்திலே நீராட வாருங்கள். கிருஷ்ணன் பரிபூரணமான ஏரியை போலே. அந்த ஏரியிலே இறங்கி அவன் குணங்களை அனுபவித்து பகவத் கைங்கரியம் பண்ண வாருங்கள் என அழைக்கிறாள் ஆண்டாள்.
நேரிழையீர்
இந்த பகவத் அனுபவம் பண்ணுவதற்கு ஏற்ற ஞான, பக்தி, வைராக்கியங்களைக் கொண்டவர்களே
கதிர் மதியம் போல் முகத்தான்
எம்பெருமான் தன் அடியார்களுக்கு அருளையும் அதே சமயத்தில் பகைவர்களுக்கு நெருப்பு போன்ற துன்பம் மிகுந்த வெப்பத்தையும் தரவல்லவன்
பறை தருவான்
இங்கு பறை என்பது மோக்ஷத்தையும் அதன் பலனான கைங்கரிய ஸித்தியும் குறிக்கிறது
நாராயணனே
எம்பெருமான் ஒருவனே நமக்கு மோக்ஷத்தை தந்தருளுவான். "னே" எனும் ஏகார சப்தத்தால் அவனை விட்டால் வேறு கதியில்லை என அறுதியிட்டு கூறுகிறது
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!!