top of page

வைகுண்ட ஏகாதசி: இராப்பத்து மூன்றாம் நாள்! அரங்கனின் இசை வாத்யங்கள்!!

Vaigunda Ekadesi 2021: இராப்பத்தின் மூன்றாம் திருநாளை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் அரங்கனின் இசை வாத்யங்களோடு எழுந்தருளல் வைபவத்தை இங்கு விரிவாகக் காணலாம்.


இராப்பத்து முழுவதும் நம்பெருமாள் எழுந்தருளும் க்ரமம்

நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து நண்பகல் பொழுதில் சிம்ஹ கதியில், புறப்பட்டு, சேனை முதலியாருக்கு மரியாதைகள் ஆகி, நாழிகேட்டான் வாசலின் வழியே,வெளியே வந்து, துரைப் பிரதக்ஷினத்தில், வைகுண்ட ஏகாதசி அன்று கண்டருளுவதைப் போலவே, அனைத்து உபசாரங்களும் கண்டருளி, பரமபத வாசல் திறந்து, அடியார்களுக்குச் சேவை சாதித்து, புறப்பாடு கண்டருளி மணல்வெளி நோக்கி எழுந்தருள்வார்.


சென்றைய பதிவில்...

இராப்பத்து முதல்நாள் (வைகுண்ட ஏகாதசி) பதிவில், வைகுண்ட ஏகாதசி வைபவமும், மற்ற 9 நாட்கள் நடைபெறும் வைபவங்களும், ஒரு ஜீவாத்மா எப்படி இந்தப் பூலோகத்திலிருந்து, பரமபதம் செல்கிறார் என்று நம்பெருமாளே நடத்திக் காட்டும் ஓர் அற்புதம் என்று பார்த்தோம். அதை பற்றி விரிவாகப் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.


நம்பெருமாள் சாத்துப்படி (அலங்காரம்):

நம்பெருமாள்

  • நேர் கீரிடம்,

  • பஞ்சாயுத மாலை,

  • பவள மாலை,

  • மகரி,

  • சந்திர ஹாரம்,

  • தாயார் - பெருமாள் பதக்கம், அடுக்கு பதக்கங்கள்,

  • சிகப்பு கல் அபயஹஸ்தம்

போன்ற திருவாபரணங்கள் அணிந்து ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.




இன்றைய பாசுரங்கள்: திருவாய்மொழி இரண்டாம் பத்து - 110 பாசுரங்கள்


அரையர் அபிநயம் & வியாக்யானம்:

கிளரொளியிளமை கெடுவதன் முன்னம், வளரொளி மாயோன் மருவிய கோயில், வளரிளம் பொழில்சூழ் மாலிருஞ்சோலை, தளர் விலராகிச் சார்வதுசதிரே.

- திருவாய்மொழி - இரண்டாம் பத்து


வைகுண்ட ஏகாதசியில் நடைபெறும் சிறப்பு வைபவங்கள்

நம்பெருமாள்பரமபதவாசல் திறந்து வெளியே எழுந்தருளும் போது, எக்காளம் முதலான பலவகை வாத்தியங்கள் ஊதப்படுகின்றன.


அரங்கனின் இசை வாத்யங்கள்:

ஒரு காலத்தில் அரங்கனுக்கு, 68 வகையான இசைக்கருவிகள் இருந்தனவாம். ஆனால் இப்போது மிகக் குறைந்த அளவிலேயே உள்ளன. இவை ஸ்ரீரங்கம் பெரிய கோவிலுக்கென்றே உள்ள பிரத்யேகமான வாத்யங்கள். மற்ற திவ்ய தேசங்களில் இது போன்ற வாத்யங்கள் இல்லை.


இப்போது இசைக்கப்படும் வாத்யங்களில் சில:

1.வெள்ளி எக்காளம், 2.சுத்த மத்தளம், 3.இடக்கை வாத்தியம், 4.சேமங்கலம்,

5.வீரவண்டி, 6.திருச்சின்னம், 7.வாங்கா, 8.பாரிமணி, 9.பாரிஉடல், 10.ஜால்ரா, 11.பெரிய உடல்(டமாரம்),12 செம்பு எக்காளம், 13.மிருதங்கம், 14 சங்கு,15.பேரி

தாளம், 16 தவில், 17.திமிரி நாதஸ்வரம், 18.தக்கை, 19.மிருதங்கம். 20.நான்முகன் கோபுர வாசலில் முழக்கப்படும் பிரம்மாண்ட முரசு. 21.சந்தனு மண்டபத்தில் தனிப்பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் வீணை.


ஸ்ரீரங்கராஜ ஸ்தவம் கோஷ்டி


நடைகொட்டகையில், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், உடையவர் ஆகியோர் நம்பெருமாளை எதிர்கொண்டு அழைப்பர். அப்போது பட்டர் அருளிசெய்த ஸ்ரீரங்கராஜ ஸ்தவம் கோஷ்டி சேவிக்கப்படும்.


  • பரமபதத்தில் உள்ளவர்கள், முக்தி பெற்ற ஒருவனை, அவன் பரமபதம் நோக்கி வரும்போது, வரவேற்பது போல, ஸத்காரம் செய்வது போல் குறிக்கிறது.


  • அரையர்கள் நம்பெருமாள் புறப்பாட்டில் தாளம் இசைத்துக்கொண்டே வருவார்கள்.


  • திருப்பணி செய்வோர் (தீர்த்தக்காரர்கள்) நம்பெருமாள் திருவடி விளக்க தீர்த்தம் சேர்க்கிறார்கள்.


  • கொட்டகைக்கும் ஆயிரம் கால் மண்டபத்திற்கும் இடையில் உள்ள இடமான "தவிட்டரை கோபுர வாசல்" என்னும் இடத்தில் நம்பெருமாள் உள்ளே நுழைகிறார் என்று கூறுகிறார்கள்.


திருவரங்கத்திற்கும் பரமபதத்திற்கு உள்ள ஒப்புமை:


திருவரங்கத்தில் இந்த உற்சவத்துக்காக அமைக்கப்பட்ட கொட்டகையானது, பரமபதத்தில் உள்ள திவ்யமயமான, ஆனந்த மயமான, மண்டபத்தினைப் போலவே உள்ளது.


  • ஆயிரங்கால் மண்டபத்தில், 979 தூண்களே உள்ளன.

  • ஒவ்வோர் ஆண்டும், மண்டபத்தின் முன்பு 21 தென்னை மரங்களால் தூண்கள் அமைக்கப்பட்டு கொட்டகை அமைக்கப்படுகிறது. (இந்த உலகமானது அழியக்கூடிய லீலாவிபூதி என்பதை உணர்த்தவே, இந்த அழியக் கூடிய / தற்காலிக, 21 மரத் தூண்கள் கொட்டகை. ஒரு முறை இவற்றையும் கல்தூண்களாக வைத்து நிரந்தர கல் மண்டபமாகச் செய்ய முயற்சித்த போது, அதை அரங்கன் ஏற்றுக்கொள்ள வில்லையாம்!)


  • அந்தக் கொட்டகையில், நம்பெருமாள், ஆழ்வார்களுக்கு மரியாதை செய்துவிட்டு, "பத்தியுலாவுதல்" கண்டருவார்.


  • ஆயிரங்கால் மண்டபத்திற்கு வந்து,"படியேற்ற மாலை"சாற்றிக்கொண்டு, ஏறிச் செல்லும்போது, "தாஸ நம்பிகள்" என்போர் எதிரில் வருவதால், பரமபதவாசிகள், பரமபதத்திற்கு வந்த, முக்தனை, எதிர்கொண்டு அழைத்து, பரமபதத்தில் உள்ள வைபவங்களைச் சுற்றிக்காட்டுகிறார்கள் என்பதைக் குறிக்கிறது.


  • பிறகு நம்பெருமாள், திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி இருக்கும் போது, எதிரில் ஆழ்வார்கள் எழுந்தருளி அமர்ந்து இருப்பர்கள். அதன் பின்பு அரையர் சேவை நடைபெறும்



ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!!

 
 
 

Comments


bottom of page