மார்கழியில் திருப்பாவையின் கொண்டாடம் (Margazhi Thiruppavai) என்ற தலைப்பில் திருப்பாவையின் ஒவ்வொரு பாசுரங்களையும் அதன் மூலமும் விளக்கத்தையும் வழங்குகிறோம். அந்த வகையில், திருப்பாவையின் இரண்டாம் பாசுரமான பாடலை இங்குக் காணலாம்.
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்கு *
செய்யும் கிரிசைகள் கேளீரோ * பாற்கடலுள்
பையத்துயின்ற பரமனடிபாடி *
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி *
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம் *
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம் *
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி *
உய்யுமாறெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.
விளக்கவுரை:
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு செய்யும் கிரிசைகள் கேளீரோ
இந்த பூவுலகில் வாழப் பிறந்தவர்களே! அவனே உபாயமும் உபேயமும் என இருக்கும் நாம் நம்முடைய நோன்புக்காக பண்ண வேண்டிய காரியங்களை கேளுங்கள்
பாற்கடலுள் பையத்துயின்ற பரமனடிபாடி
திருப்பாற்கடலினுள் யோக நித்திரை கொள்ளும் புருஷோத்தமனுடைய திருவடிகளைப் பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
நெய் புசிக்க மாட்டோம் பால் அருந்த மாட்டோம், விடியற்காலையில் நீராடி விட்டு
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
கண்களில் மையிட்டு அலங்கரித்து கொள்ள மாட்டோம், பூக்களை கூந்தலில் சூடிக் கொள்ள மாட்டோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
பெரியோர்கள் செய்யாதவற்றை செய்ய மாட்டோம், பொய் சொல்ல மாட்டோம், கோள் சொல் சொல்லமாட்டோம் போன்றவை.
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
ஐயம் - பொருள் தேவை உள்ளவர்களுக்கு கொடுக்கக்கூடிய பொருளையும்
பிச்சை - பிரம்மசாரிகளுக்கும் சந்யாசிகளுக்கும் கொடுக்கும் தானத்தையும்
நம்மால் இயன்ற அளவு கொடுத்து
உய்யுமாறெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்
நாம் உய்வதற்கான (உயர்நிலையை அடைவதற்கான) வழியை உணர்ந்து மகிழ்ச்சியுடன்
அதற்காக விரதம் இருப்போம்
ஆழ் பொருளுரை
பாற்கடலுள் பையத்துயின்ற பரமன்
இதில் எம்பெருமான் அவதாரம் எடுக்கும் பொருட்டு திருப்பாற்கடலில் யோக நித்திரை செய்த படி சொல்லப்பட்டது.
இந்தப் பாசுரத்தால் செய்ய கூடியவற்றையும் செய்ய கூடாதவை குறித்தும் ஆண்டாள் விளக்குகிறாள்
விலக்க வேண்டிய ஆறு விஷயங்கள்:
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் - 2 விஷயங்கள்
மற்ற போக்ய வஸ்துகளைத் தவிர்த்து, எம்பெருமானையே எல்லாமாக (போக்யமாக) கொள்ள வேண்டும் என்கிறது உள்ளுறை பொருளால்
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம் - 2 விஷயங்கள்
மையிட்டு எழுதோம் - ஐஸ்வர்யத்தில் ஆசைக் கொள்ள கூடாது
மலரிட்டு நாம் முடியோம் - மலர் சூடுவது - தன்னை தானே அனுபவித்துக் கொள்கிற ஆத்ம அனுபவத்தில் ஈடுபடக் கூடாது.
செய்யாதன செய்யோம் - 1
நம் முன்னோர்கள் (ஆசாரியர்கள்) செய்யாதவற்றை செய்ய மாட்டோம். பிராட்டிமார், ஆசார்யர்களை முன்னிட்டுக் கொண்டே எம்பெருமானை சரணாகதி பண்ண வேண்டும். அவனை ஆஸ்ரயிக்க வேண்டும்.
தீக்குறளை சென்றோதோம் - 1
பிறருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொய் சொற்களை கூறக் கூடாது
செய்ய வேண்டிய நான்கு விஷயங்கள்:
நாட்காலே நீராடி
1. ஆசார்யர்கள் பின்பற்றிய நித்ய அனுஷ்டான கர்மங்களை(தினமும் செய்ய வேண்டிய காரியங்களை), அவர்கள் உபதேசித்த படி பின்பற்ற வேண்டும் என்கிறது
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
2. ஐயம் - பகவானின் வைபவங்கள்
3. பிச்சை - ஆழ்வார் ஆச்சாரியர்களின் வைபவங்கள்
இவை இரண்டையும் நாம் அறிந்த அளவிற்கு எப்போதும் மற்றவர்களுக்கும் கூறி பகவத் பாகவத அனுபவத்தில் ஈடுபட வேண்டும்.
உய்யுமாறெண்ணி
இந்தப் பதத்தில் ஒரு சிறப்பான அர்த்தம் நம் பூர்வர்களால் சொல்லப்படுகிறது.
4. உய்யும் + ஆறு எண்ணி - உய்யக்கூடிய ஆறு வார்த்தைகளை எண்ணி
இவ்விடத்தில் ஸ்வாமி இராமானுஜருக்கு, திருக்கச்சி நம்பிகள் மூலமாக, வரத ராஜ பெருமான் அருளிய ஆறு வார்த்தைகளை நிலை நிறுத்தி நாம் உஜ்ஜீவிக்க வேண்டும் என பூர்வர்கள் அர்த்தம் கொள்வார்கள்.
ஆறு வார்த்தைகள் பின்வருமாறு:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!!
Comentarios